Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Wednesday, January 26, 2011

இன்றைய நம் குழந்தைகள் நாளைய நமது சமுதாயம்

கல்வி
 
கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

கல்லாதவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றும், கல்வி மனிதனை மேம்படுத்தும் என்றும் காலம்காலமாய்ச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் கற்றவர்கள் நிரம்பி விட்ட இக்காலத்தில் கற்காலத்தை விடவும் தீமைகள் பெருகிக் கொண்டல்லவா இருக்கின்றன.

இதுபோன்ற செயல்களில் கற்றவர்களும் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உச்சக்கட்ட வேதனை. கல்வி ஏன் மனிதனை நல்வழிப்படுத்தவில்லை என்ற எண்ணமும் நம் நெஞ்சங்களில் எழுகின்றது.

இது கல்வியின் மேலுள்ள குற்றமா? கல்வி கற்றவர்கள் மேலுள்ள குற்றமா?

தீமைகளை மட்டும் சொல்லி விட்டு தீர்வைச் சொல்லா விட்டால் பயனேதும் இல்லை. இவற்றிலிருந்து மீள்வதற்கான தீர்வுதான் என்ன? சென்று விட்ட சமுதாயத்தைப் பற்றி சிந்தித்துப் பயன் இல்லை. இப்போது இருக்கின்ற சமுதாயத்தை நெறிமுறைப்படுத்த நாட்கள் பல ஆகலாம். அல்லது நாம் நினைப்பது போல் நடக்காமலும் போகலாம். ஆனால் இனி வரும் இளைய சமுதாயத்தை வருங்கால சமுதாயத்தை வார்த்தெடுக்கின்ற பணிகளை நாம் மேற்கொண்டால் நிச்சயமாக அதுவே நமக்கு மிகவும் நன்மை பயப்பதாக அமையும்.

தீர்வு என்ன?
தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் எண்ணுகிறோம். ஆனால் எந்தக்கல்வி நிலையம் என்பதைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் முக்கியமானது. பலமாடிக் கட்டிடங்களையும் நுனிநாக்கு ஆங்கிலத்தையும் அதிகமான கல்விக் கட்டணத்தையும் மட்டுமே நல்ல கல்விக் கூடத்துக்கான அளவு கோல்கள் என்று எடுத்துக் கொண்டால் அதுவே நாம் செய்யும் மிகப் பெரிய தவறாகவும் அமைந்து விடலாம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்மில் பலர், குழந்தைகளுக்கான நேர்த்தியான உடைகள், பெல்ட், டை, ஷூ- ஷாக்ஸ், புத்தகப்பை டிபன் பாக்ஸ் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனத்தைக்கூட தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்வதில் எடுப்பதில்லை என்றுதான் கூற வேண்டும். கல்வியை மட்டுமே கருத்தில் கொள்ளும் போது வாழ்க்கை நெறிமுறைகள், பண்பாடுகள், கண்ணியம் போன்ற பலவும் காணாமல் போய் விடுகின்றன. பின்னர் பல பட்டங்களுடன் கூடிய தனது வாரிசுகள் குடிகாரனாகவோ, வன்முறையாளனாகவோ மாறும் போதுதான் பெற்றோர்கள் மனம் பதைபதைக்கிறது. உள்ளம் உதிரத்தைக் கொட்டுகிறது. குதிரை ஓடிய பிறகு லாயத்தை மூடி என்ன பயன்? அது போல்தான் இவர்களது கதையும் எல்லாம் முடிந்தபின் என்ன செய்ய முடியும்? பல மெத்தப்படித்த மேதாவிப் பெற்றோர்களின் நிலையும் இதுதான்.

நெறிசார்ந்த கல்வி
எனவே இன்றைய தேவை நெறிசார்ந்த கல்வியாகும்.(value Based Education) ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்க்கும் போது அவர்களது எதிர்காலத்தையும் அங்கு அடைக்கலப் பொருளாகக் கொடுக்கிறார்கள். எனவே கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவற்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

கல்வி தரமானதாக இருக்க வேண்டும். கல்வியுடன் குழந்தைகளுக்கு நன்னெறி போதனைகளையும் நல்ல பண்புள்ள பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி நிலையங்கள் காசு ஒன்றினை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்கள் நஞ்சுகள் கலந்து விடாமல் பாதுகாத்து அவர்களை நல்லவர் களாக்குவதற்கான தார்மிகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இன்று மாணவர்களுக்கான முன்மாதிரி அரிதாக இருக்கிறது. அதனால் ஆசிரியர்களே தியாக உணர்வுடன் நேர்மையாகச் செயல்பட்டு மாணவர்களுக்கு மாடல்களாக விளங்க வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை கல்வி நிலைய நிர்வாகிகள் பணியில் அமர்த்த வேண்டும். அது போன்ற கல்வி நிலையங்களால் மட்டுமே மாணவர்களுக்குத் தரமான கல்வி கற்பிப்பதுடன் நற்போதனை வகுப்புகளையும் நடத்தி தீமைகளிலிருந்து அவர்களைத் தடுத்து நல்லவர் களாக நாட்டின் நற்குடிமக்களாக பெற்றோரைப் பேணுபவர் களாக சுற்றத்தாரை மதிப்பவர்களாக அண்டை அயலாருடன் அன்புடன் பழகுபவர்களாக உருவாக்க முடியும்.
 

Post Comment

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...