Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Thursday, March 1, 2012

தமிழ் மக்கள்


1.2 தமிழ் மக்கள்

தமிழர் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள்.
பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம்
பெறத்தக்க உயர்ந்த நாகரிகத்தை உடையவர்கள். தமிழர் பண்பாடு,
உலகம் போற்றும் ஒரு சிறந்த பண்பாடு. இத்தகைய சிறப்புடைய
தமிழ் மக்களின் இன்றைய தாழ்ந்த நிலையைச் சுட்டிக் காட்டி,
அவர்கள் பெறவேண்டிய புத்துணர்ச்சியையும் வலியுறுத்திப்
பாரதிதாசன் பல பாடல்கள் இயற்றியுள்ளார்.

1.2.1 தமிழரின் தொன்மைச் சிறப்பு
இந்த நில உலகு தோன்றிய காலத்திலேயே தமிழ் இனம்
தோன்றிவிட்டது. மனித வாழ்வை உருவாக்கியதே தமிழ்மொழி
என்று தமிழினத் தொன்மைச் சிறப்பை எடுத்துரைக்கிறார்.

    புனல்சூழ்ந்து வடிந்து போன
    நிலத்திலே புதிய நாளை
    மனிதப் பைங்கூழ் முளைத்தே
    வகுத்தது மனித வாழ்வை
    இனிய நற்றமிழே நீதான் எழுப்பினை
(அழகின்சிரிப்பு : தமிழ் - முதல்பாடல் வரிகள்: 1 - 6)

(கூழ் = பயிர்)
மேலும் தமிழ்மொழியின் தொன்மையினையும், தமிழர்கள் தொன்மை
நாகரிகம் கொண்டவர்கள் என்பதனையும்,

    மொழியில் உயர்ந்தது தமிழ்மொழியே - பண்டு
    முதல் நாகரிகமும் பழந்தமிழ் மக்களே
(தேனருவி, தமிழன், வரிகள்: 11 - 13)

என்று சுட்டுகிறார்.

1.2.2 தமிழரின் பெருமை
தமக்கென ஒரு தனிப் பண்பாட்டையும், நாகரிகத்தையும்
உடையவர்கள் தமிழர்கள். பெருமைக்கு உரிய தமிழர் பண்பாடு
இன்று வரையிலும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. அந்தப்
பண்பாட்டுக் கூறுகளில் விருந்தோம்பல் முதன்மையானது.

• விருந்தோம்பல்
தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ் இனமக்கள் நல்ல பண்புகள்
பொருந்தியவர்கள். அவர்களின் பண்புகளில் சிறந்தது
விருந்தோம்பல். சங்ககாலம் முதற்கொண்டே விருந்தினரைப்
போற்றி வாழ்கிறார்கள்.     விருந்தினர்களைப் போற்றி
வாழ்வதினாலேயே உலகம் முழுவதும், புகழுடன் வாழ்கிறார்கள்
தமிழர்கள் என்கிறார் பாரதிதாசன்.


    நற்றமிழர் சேர்த்த புகழ்
    ஞாலத்தில் என்னவெனில்
    உற்ற விருந்தை
    உயிரென்று - பெற்று உவத்தல்.
(குடும்பவிளக்கு, இரண்டாம் பகுதி -
விருந்தோம்பல் - மாமன் மாமி மகிழ்ச்சி பாடல்)

தம்மை வந்து அடைந்த விருந்தினர்களுக்குத் தமிழர்கள்,
விருந்தோம்பலைத் தம் உயிருக்கும் மேலாகக் கருதினர். எனவே
விருந்தினரைப் பேணும் பொழுது பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்
எனக் குறிப்பிடுகிறார் பாரதிதாசன்.

• தமிழரும் தமிழ்க் கலையும்
சீரும் சிறப்புமாக வாழ்ந்த பண்டைத் தமிழர் நிலையையும்
இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார் பாரதிதாசன்.
புலிக் கொடியும், வில் கொடியும், மீன் கொடியும் கொண்டு ஆட்சி
செய்த மூவேந்தர் காலத்தில், உலகெங்கும் புகழ் பரப்பும் வகையில்,
செந்தமிழின் ஒலியே கேட்டது. தமிழ் நாட்டுக் கலைகளே
ஒளியாய்க் கண்முன் காட்சியளித்தன. ஆனால் இன்று, பிறமொழி
ஒலிகளும், பிறநாட்டுக் கலைகளுமே மலிந்து உள்ளன. இந்த
நிலைமாறி மீண்டும் பழைய நிலை என்று வருமோ என்று
ஏங்குகிறார் பாரதிதாசன். எனவே

காட்சி

    ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்
    ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்
    புலி, வில், கயல் கொடி மூன்றினால்
    புது வானம் எங்கும் எழில் மேவிடும்
    அந்த வாழ்வுதான் எந்நாள் வரும்?
(இசையமுது, எந்த நாள்: 5-8)

(கயல் = மீன் , மேவிடும் = பொருந்திடும்)
என்று குறிப்பிடுகிறார்.

• இசைத்தமிழ்
இசையில் - தமிழ் இசையில் தமிழர்கள் எந்த வகையில்
ஈடுபாட்டுடனும், புலமையுடனும் இருந்திருக்கிறார்கள் என்பதையும்
பாரதிதாசன் விளக்கிக் கூறியுள்ளார்.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழ்மக்கள், இயற்கையின்
பொருள்களிலிருந்து - அவற்றின் ஒலிகளிலிருந்து இசையை
அமைத்துக் கொண்டனர். குயிலின் குரல் இனிமையைக் கேட்டு
மகிழ்ந்ததைப் போல், தாம் கேட்டு இன்புற்ற பறவைகளின் இனிய
ஒலிகளிலிருந்தும், வண்டுகளின் ரீங்காரத்திலிருந்தும், மூங்கிலின்
ஒலியிலிருந்தும் பெற்ற இன்னிசையைத் தமிழ் இசையாக மாற்றிய
பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள். எனவே தமிழருக்கே உரிய
தமிழ் இசை என்பது, இயற்கையிலிருந்து பிறந்தது என்கிறார் பாரதிதாசன்.

காட்சி

    பழந்தமிழ் மக்கள் அந்நாள்
    பறவைகள் விலங்கு வண்டு
    தழை மூங்கில் இசைத்ததைத் தாம்
    தழுவியே இசைத்த தாலே
    எழும் இசைத்தமிழே.
(அழகின் சிரிப்பு: 57)

இயற்கையிலிருந்து பெறப்பட்ட இந்தத் தமிழ் இசை, தனிச்சிறப்பு
வாய்ந்தது. இசையமுதில் தமிழன் வாழ்ந்த இன்ப வாழ்வின்
அடையாளம் இசைத்தமிழே என்கிறார். இதனைக்

    குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு
    கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை
(இசையமுது. எந்த நாள்: 9-10)

என்று குறிப்பிடுகிறார். இசைத்தமிழ் தமிழர்களின் குறைவில்லாத
செல்வம்.; தமிழர்கள் நெஞ்சில் நிறைந்த செல்வம்.

1.2.3 தமிழரின் வீரம்
பண்டைத் தமிழர்கள் வீரத்தின் சிறப்பினைப் புறநானூறு போன்ற
பழைய இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. அந்த வீரப்
பாரம்பரியப் பெருமையைத் தமது தமிழ் உணர்வு வெளிப்படுமாறு
எடுத்துரைக்கிறார் பாரதிதாசன்.

    செந்தமிழர் இருக்கின்றார் சிங்கங்கள் போல்
    திறலழித்துவிட எவரும் பிறந்தாரில்லை.
(தமிழச்சியின் கத்தி, அத்தான் என்று எதிர் வந்தாள்:1-2)

தம் பழம் பெருமையைக் காப்பாற்ற வேண்டும் தமிழர்கள்.
தமிழர்களின் வீரம் சிங்கம் போல் ஆற்றல் வாய்ந்தது; அந்த
ஆற்றலை அழிப்பது எளிதல்ல என்று கூறுகிறார் பாரதிதாசன்.

• இமயத்தில் தமிழ்க் கொடி
பண்டைத் தமிழ் மன்னர் ஒருவர், வடநாடு சென்று போரிட்டு,
வெற்றி பெற்று, தன் வெற்றிக்கு அடையாளமாக இமயமலையின்
மேல், தன் நாட்டின் கொடியை ஏற்றி வைத்தார். இந்த வீர
வரலாற்று நிகழ்ச்சியை நினைவூட்டி “நாம் தமிழர்” என்று
சொல்வதில் எத்தகைய பெருமிதம் கொள்கிறார், பாரதிதாசன்!


    இமய வெற்பின் முடியிற் - கொடியை
    ஏறவைத்த நாங்கள் தமிழர் என்று சொல்வோம்.
(இரண்டாம் தொகுதி - 39. பகை நடுக்கம். வரிகள்: 2 - 4)

இவ்வாறு, தமிழர்களிடமுள்ள வீரத்தின் சிறப்பினைப் பல பாடல்கள்
மூலம் வெளிப்படுத்துகிறார் பாரதிதாசன்.

1.2.4 தமிழரின் கடமைகள்
தாய்மொழியாம் தமிழ் வளம் பெற்றால்தான், தமிழன் வளம்
பெறுவான். தமிழ் வாழ்ந்தால்தான் தமிழன் வாழ்வான் என்ற
நம்பிக்கை பாரதிதாசனுக்கு இருக்கிறது. எனவே, தமிழுயர்ந்தால்
தான் தமிழன் உயர்வான், தமிழ்ப் பகைவனும் தானே மறைவான்
என்று குறிப்பிடுகிறார். தமிழை வளப்படுத்த என்ன வழி? அது
எவ்வாறு வாழும்? தமிழ் எங்கும் நீக்கம் அற நிலைத்து நிற்க
வேண்டும்; அதற்கான பணிகளைச் செய்ய வேண்டும். கலைச்
செல்வங்கள் யாவும் தமிழாய் நிலைக்க வேண்டும் என்று
குறிப்பிடுகிறார் பாரதிதாசன். எனவே

    நன்று தமிழ் வளர்க ! தமிழ்
    நாட்டினில் எங்கணும் பல்குக ! பல்குக
    என்றும் தமிழ் வளர்க - கலை
    யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக !
(முதல்தொகுதி - 21.
தமிழ் உணவு 8-வது பாடல், வரிகள் 3 - 6)

என்று வேண்டுகிறார் கவிஞர்.

• தமிழும் தமிழரும்
தமிழ் வாழ்ந்தால் தமிழர்கள் வாழ்வார்கள் என்று கருதிய
பாரதிதாசன், தமிழையும் தமிழரையும் பிரிக்க முடியாது என்று
உணர்ந்தார். எனவே,

    தமிழ்மொழி வாழ்க !
    தமிழர் வாழ்க !
(இளைஞர் இலக்கியம், வாழ்க வரிகள்: 1 - 2)

என வாழ்த்துகிறார். தான் பெற்ற தமிழ் உணர்வைத் தமிழர்கள்
எல்லாம் பெற்று, தாய் மொழியாம் தமிழைப் பேணிப் பாதுகாத்து
வளர்க்க வேண்டும் என்று விரும்பினார் பாரதிதாசன்.

1.2.5 தமிழர் ஒற்றுமை
தமிழ்வாழ, தமிழர் வாழ. தமிழர்களிடையே ஒற்றுமை மிக
அவசியம் என எண்ணினார் பாரதிதாசன். எனவே, தமிழர்களின்
ஒற்றுமையைப் பற்றிப் பல பாடல்கள் பாடினார்.
தமிழர்கள் தங்களுக்குள் வேற்றுமை பல கொண்டுள்ளனர்.
அவ்வேற்றுமையை ஒழிக்க வேண்டும். அதற்கு என்ன வழி?
தமிழால் - செந்தமிழால் ஒன்றுபட வேண்டும். தமிழ் - தமிழர்
என்ற உணர்வு ஏற்பட வேண்டும். இதனைச்,

    செந்தமிழ் ஒன்றே
    நல்லொற்றுமை சேர்க்கும் ; நன்னெறி சேர்க்கும்

என்று குறிப்பிடுகிறார். மேலும், தமிழர் ஒற்றுமையாய் வாழ்ந்தால்
என்ன நிகழும் என்பதையும் சுட்டுகிறார்.
தமிழுக்குப் பகையாக இருப்போர் எல்லாம், தமிழர்களிடையே
காணப்படுகின்ற ஒற்றுமையைப் பார்த்து ஓடி ஒளிந்து கொள்வார்கள்
என்று கூறுகிறார் பாரதிதாசன். ஒற்றுமையால் ஏற்படும் நன்மையைக்
கூறும்போது,

    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
(தேனருவி - செந்தமிழ்ச் செல்வம், வரிகள்: 4 - 5)

என்று குறிப்பிடுகிறார்.

• உடல் பல உயிர் ஒன்று
தமிழ் உணர்வால் ஒன்றுபட்ட தமிழர்கள், உடலளவில் பலராக
வாழ்ந்தாலும், உயிரளவில் ஒருவரே இதனை,

    வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
    வீரம்கொள் கூட்டம் அன்னார்
    உள்ளத்தால் ஒருவரே மற்று
    உடலினால் பலராய்க் காண்பார்.
(முதல்தொகுதி. எந்நாளோ? 5-வது
பாடல், வரிகள்: முதல் 4 வரிகள்)

என்ற பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார். இங்கு ‘வெள்ளம்போல்
தமிழர் கூட்டம்’ என்று ஓர் அருமையான உவமையைக்
கையாளுகிறார். வெள்ளம் ஒன்று திரளும். பிரிந்தாலும் மீண்டும்
கூடும். குறுக்கே பிளந்தாலும் ஒன்று சேரும். தமிழர்களின்
ஒற்றுமை அவ்வாறு தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான்
தமிழர் ஒற்றுமை நிலைக்கும். தமிழும் தமிழரும் தரும் பெருமையும்
மேலும் மேலும் வளரும்; வாழும் என்று நம்பினார் பாரதிதாசன்.

Post Comment

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...